top of page

Vallalar அடிப்படை ஒழுக்கங்கள் (நித்திய கருமவிதி)


காலையில் எழுதல்:

1. சூரிய உதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுதல் வேண்டும்,

2. உடல் தூய்மை செய்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

தாம்பூலம் தரித்தல்:

3. களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு, முன் ஊறுகிற எச்சிலை உமிழ்ந்து, பின்வரும் நீரை உட்கொள்ளல் வேண்டும்.

4. எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும். பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும்.

மலங்கழித்தல்:

5. மலங்கழிக்கின்றபோது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும்.

(மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும்)

6. ஜலம் கழிக்கும் போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும்.

ஜலம் (சிறு நீர்) தடை பட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜலவுபாதி கழித்தல் வேண்டும்)

(மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும், ‍ மலஜலத்தைச் சிறிதும் அடக்கப்படாது)

உடல் தூய்மை:

7. மலஜல வுபாதி கழிந்த பின், செவிகள், கண்கள், நாசி, வாய் தொப்புள் - இவைகளில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும், கைகால் முதலிய உறுப்புக்களிலுள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றறத் துடைத்தல் வேண்டும்.

பல் துல‌க்கள்:

8. பின் வேலங்குச்சி ஆலம்விழுது - இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்தல் வேண்டும்.

9. அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பல் வேண்டும்.

மூலிகை பானம் கொள்ளல்:

10. பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுளையிலை முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு - இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் (நீரில்) போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.

வேலை:

11. காலையில் இளம் வெய்யில் தேகத்திற் படாதபடி, பொழுது விடிந்து 5 நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும்.

12. பின்பு வெய்யிலில் நெடுநேரம் தேகமெலிவு வரத்தக்க உழைப்பையெடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந்தோன்ற முயலுதல் வேண்டும்.

13. பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

உணவு:

13. பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது (அலட்சியம்) மிகுந்த தீவிரமுமாகாது.

உண்ண வேண்டிய அரிசிவகைகள்:

14. முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் - ஆகும்.

சாதம் வடிக்கும் முறை:

15. அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும்.

16. ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை.

நீர்குடித்தல்:

போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.

உணவு வகைகள் கொள்ளுதல், தள்ளுதல்:

17. கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்.

18. பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் - இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும்.

19. பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும்.

20. பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும்.

30. மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும்.

31. கடுகு சேர்ப்பது அவசியமல்ல.

32. உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.

33. அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம்.

34. தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும்.

35. வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் - இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும்.

36. இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் - இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம்.

37. வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும்.

38. சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம்.

39. புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று.

40. கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை - இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும்.

41. புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும்.

நீர்குடித்தல்:

42. சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, மேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது.

புலால் தவிர்த்தல்:

43. எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது.

உணவு உண்ணுதல்:

44. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறைவாகவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.

பகல் ஓய்வு:

45. பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது.

46. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது.

பழம்/தாம்பூலம் உண்ணுதல்:

47. சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் தாம்பூலம் பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும்.

48. பகற் போஜனஞ் செய்த சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்களா வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும்.

48. காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும்.

மாலை செயல்பாடுகள்:

49. பகற்போஜனஞ் செய்த பின், சற்று நேரங் கடவுளைத் தியானித்திருக்க வேண்டும். அதன் பின் எந்த வேலை செய்யினுந் தேக கரணங்களுக்கு மெலிவு உண்டு பண்ணுகிற வேலைகளாகச் செய்யப்படாது. செய்யினும் சிறிது சிறிதாகச் செய்தல் வேண்டும்.

50. சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை - இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.

இரவு செயல்பாடுகள்:

51. இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல்.

52. தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் - இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும்.

53. இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்.

54. இரவில் தயிர் கீரை வாயுவான பதார்த்தம் குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்தரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம்.

55. இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும்.

56. சுமார் 12 நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும்.

57. பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்பட கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

உடலுறவு:

58. பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது.

59. பெண்களுடன் தேகசம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தைத் தேகசம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும்.

60. தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் - என்றால், வேறுபடாமல் - மன முதலிய கரண சுதந்தரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும்.

61. புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும்.

62. அவ்வுபாயமாவது பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே யுலாவச் செய்து கொள்ளுதலாம். ஒரு முறையன்றியதன் மேலுஞ் செய்யப்படாது.

63. தேகசம்பந்தஞ் செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும்.

64. இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற் கொருவிசை செய்தல் அதம பக்ஷம்.

65. 8 தினத்திற் கொருவிசை செய்தல் மத்திம பக்ஷம்.

66. 15 தினத்திற்கொருவிசை செய்தல் உத்தம பக்ஷம்.

67. அதன் மேற்படில் சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும்.

68. 4 தினத்திற்கொரு விசை செய்யில் சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும், ஆதலில், அதம பக்ஷமாயிற்று. சுக்கிலத்தைச் சிறிதும் வீணில் விடப்படாது. துன்மார்க்கப்பழக்கஞ் செய்யக்கூடாது.

இரவில் உறங்கும் முறை:

69. எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடதுகைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும்.

70. பின்பு ஏழரை அல்லது பத்து நாழிகையளவு நித்திரை செய்தல் வேண்டும்.

71. அதன் பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடனிருத்தல் வேண்டும்.

72. இரவில் சொப்பனம் வாராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.

பொது செயல்களின் ஒழுக்கம்:

73. எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது.

74. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும்.

75. கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

தலை குளித்தல்:

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும்.

போதைப் பொருட்களை கைவிடல்:

புகைக்குடி, கஞ்சாக்குடி, கள்குடி, சாராயக்குடி முதலிய மயக்கக்குடி களாகா.

தியானம் செய்தல்:

எந்த வேலை செய்யினும், எந்த விவகாரஞ் செய்யினும், சிவசிந்தனையோடு செய்து பழகுதல் வேண்டும்.

இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து, ஓங்காரபஞ்சாக்ஷர ஞாபகஞ்செய்தல் வேண்டும்; சிவபஞ்சாக்ஷர ஞாபகஞ் செய்தல் வேண்டும்; அவசியம்.

173 views0 comments

Comments


About Me

BSP profile  - BW.jpg

Sri Nithya Bramhaswarupananda Swami is a committed Hindu monk, living and enriching society with the Vedic lifestyle. He resides in the sacred temple town of Tiruvannamalai, in Tamil Nadu, India. He was initiated into the path of Poorna Sannyasa (Hindu monasticism) in the Adi Shaiva tradition, on the auspicious occasion of Mahashivaratri in 2014. Prior to embracing the spiritual path, He held a Master’s degree in Information Technology and enjoyed a prolific career taking on leadership roles in multinational companies like Tata Consultancy Services and Microsoft Corporation.

#LeapofFaith

Posts Archive

Let's Travel Together

Thanks for submitting!

bottom of page